கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரிடம், உதகையில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து மறுபுலன் விசாரணை உதகை பழைய மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி எஸ்.பி ஆஷிஸ் ராவத், கூடுதல் எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள், சாட்சியங்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
வழக்கில் முதல் குற்றவாளியாக கூறப்படும் சயானிடம் கடந்த ஆகஸ்டு 17ஆம் தேதி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஜாமினில் உள்ள கேரளாவை சேர்ந்த சந்தோஷ் சாமி மற்றும் மனோஜ் சாமி ஆகியோரிடம் நேற்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
இன்று இரண்டாவது நாளாகவும் விசாரணை நடைபெற்றது. மேலும் சதீஷன் மற்றும் பிஜூன்குட்டி ஆகியோரும் காவல்துறை முன்பு விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். இவர்கள் நான்கு பேரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








