கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு விசாரணை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே கோடநாடு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோரை விசாரிக்க அனுமதி மறுத்து நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதலாக சிலரை விசாரிக்க வேண்டுமென்பதற்கான காரணங்களை மனுதாரர்கள் விளக்கமாக கூறவில்லை. இதுதொடர்பாக மனுதாரர்கள் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார். மனு தொடர்பாக மூன்று வாரங்களில் காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும், கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு உள்பட மூன்று பேர் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.







