முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 சதவிகிதம் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாகக் கூறி அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதி நிர்மல்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், “முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார். அதுகுறித்த மேல் விசாரணை நடந்து வருகிறது” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரசு தரப்பு முன்வைத்த வாதத்தில், “ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகார் குறித்த ஆரம்பகட்ட விசாரணையில், வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாக சொத்து சேர்த்ததாக கூறி வழக்கை கைவிட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் 73 சதவீதம் அளவுக்கு ராஜேந்திர பாலாஜி சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளதால் மேல் விசாரணை தொடர்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.