அதிமுக பொதுக்குழு தொடர்பான தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த இபிஎஸ் மேல் முறையீடு வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல், மேல்முறையீட்டு மனுவைப் பட்டியலிடும்படி, இபிஎஸ் தரப்பில் கூடுதல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இபிஎஸ்-ன் கூடுதல் மனுவும், ஓபிஎஸ்-ன் கேவியட் மனுவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்ததுபோல, வைரமுத்து வழக்கின் உத்தரவுகளையும் எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருப்பதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அண்மைச் செய்தி: ‘படுகர் இன மக்களைத் தனி பழங்குடியினர் சமூகமாகக் கணக்கிட வேண்டும்: ஆ.இராசா’
மேலும், தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் 3 மேல்முறையீட்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க ஒப்புதல் அளித்ததுடன், மூன்று மனுக்களையும் விசாரணைக்குப் பட்டியலிடும்படி உத்தரவிட்டனர்.
அதன்படி, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் தொடங்கியது. பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக இருப்பதால் வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்குத் தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்குத் தள்ளிவைத்தனர்.








