எங்கள் இடத்தை சர்வே செய்து கொடுங்கள் இல்லையென்றால் குடும்பத்தையே கருணைக் கொலை செய்து விடுங்கள் என ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மனு கொடுக்க வந்ததால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் போகணபள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட தொன்னைகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்ற பெண் தங்கள் குடும்பத்தையே கருணை கொலை செய்து விடுங்கள் என மனு அளித்தார். அவர் அளித்துள்ள மனுவில் தனது தாயார் பாக்கியம் பெயரில் உள்ள இடம் மற்றும் வீட்டை சர்வே செய்து அளந்து தரும்படி போகனப்பள்ளி பஞ்சாயத்து சர்வேயரிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அலுவலகத்திற்கு நேரில் சென்றும், தொலைப்பேசி மூலமாகவும் கேட்டு வருவதாகவும், ஆனால் தினமும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அலைய விடுவதாகத் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘சென்னை மாநகராட்சி; ஒரு பள்ளியில் மட்டுமே 100% தேர்ச்சி’
மேலும், நிலத்தை சர்வே செய்து தரவில்லை என்பதால், குடும்பமே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியவில்லை எனவும், 12ம் வகுப்பு முடித்த தனது மகனை மேல் படிப்பில் சேர்வதற்குப் பொருளாதார சூழ்நிலை எனவும் தெரிவித்துள்ள அவர், சொத்தை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மருத்துவம் பார்க்கலாம் என்றால், சர்வேயர் நிலத்தை அளந்து கொடுக்க மறுப்பதாகக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலத்தை அளந்து தாருங்கள் இல்லை என்றால் எங்கள் குடும்பத்தையே கருணைக் கொலை செய்து விடுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.