மல்லிகார்ஜூன கார்கேயின் வெற்றியை காங்கிரஸ் கட்சியின் வெற்றியாகவே நாம் கருத வேண்டும் என்று சசிதரூர் கூறியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்காக மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் நேரடி போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் நேற்று முன்தினம் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளார்.
காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களே ஒவ்வொரு முறையும் போட்டியின்றி தலைவராக தேர்வாகி வந்த நிலையில் தற்போது மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதிவிக்கு போட்டியிட்ட சசிதரூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கார்கேயின் வெற்றியை காங்கிரஸ் கட்சியின் வெற்றியாகவே நாம் கருத வேண்டும். இந்தத் தேர்தல் ஒரு நபரைப் பற்றியது அல்ல. எப்போதும் கட்சியைப் பற்றியது. காங்கிரஸை வலுப்படுத்துவது நாட்டுக்கு மிகவும் முக்கியம் என்பதால் கட்சியை பலப்படுத்தவே நான் எப்போதும் விரும்புகிறேன்.
https://twitter.com/ANI/status/1582706000221863936
நான் மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்திற்குச் சென்று அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். மூத்த தலைவர், கட்சிக்கு எப்போதும் வழிகாட்டுவார். 1000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் எனக்கு வாக்களித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் கட்சி 22 ஆண்டுகளாக தேர்தலை நடத்தவில்லை. இந்த மாதிரியான தேர்தலில் குளறுபடிகள் இருக்கும் என்று சசிதரூர் கூறினார்.








