கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, இராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால். கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கடந்த அக்டோபர் 11-ம் தேதி முதல் நேற்றுவரை 29 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலரை காணவில்லை. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு, ராணுவம் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கேரள நிலவரம் குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அவர் கேட்டறிந்துள்ளார்.
கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி சிலர் உயிரிழந்திருப்பது துரதிர்ஷ்டமானது என்றும் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அனைவரும் பாதுகாப்பாகவும் நலமுடனும் இருக்க பிரார்த்திப்பதாகவும் ட்விட்டரில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று முதல் அக்.24ஆம் தேதி வரை மிக கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. இந்நிலையில் மழைக்கு பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகையை கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் 6 தாலுகாக்களில், 63 முகாம்கள் அமைக்கப்பட்டு 515 குடும்பத்தினர் 1840 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 26 வீடுகள் முழுமையாகவும், 304 வீடுகள் பாதி அளவு சேதமடைந்துள்ளன. கனமழை காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோராப்பட்டுள்ளது.
அதே போல இன்று மாநிலம் முழுவதும் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும், கோட்டயத்தில் 33 இடங்களில் நிலச்சரிவு எச்சரிக்கையும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் விடுத்துள்ளது.