கனடாவின் ஒன்டாரியோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Latitude Air Ambulance நிறுவனம், மருத்துவ அவசரகால விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது. கனடாவில் பதிவு செய்யப்பட்ட கல்ஃப்ஸ்ட்ரீம் ரக மருத்துவ விமானம், பெர்முடாவில் இருந்து பாஸ்டன் நோக்கி சென்று கொண்டிருந்தது. விமானத்தில் 4 விமானப் பணியாளர்கள் மற்றும் 2 பயணிகள் என மொத்தம் 6 பேர் இருந்தனர்.
பெர்முடாவின் எல்.எஃப். வேட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி
அதிகாலை 12.41 மணிக்கு விமானம் புறப்பட்டது. பாஸ்டன் நோக்கி பறந்து கொண்டிருந்த
விமானத்துடனான தொடர்பு சனிக்கிழமை அதிகாலை துண்டிக்கப்பட்டது.
விமானம் பெரும்பாலான நேரத்தில் சுமார் 24,000 அடி உயரத்தில் பறந்ததாகவும், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு சுமார் 2 நிமிடங்களில் 13,000 அடி வரை திடீரென கீழிறங்கியதாகவும் விமான கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் இருந்த 6 பேரில் 4 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள் என கனடா போக்குவரத்துத் துறை
அமைச்சர் ஸ்டீவன் மேக்கின்னன் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 2 பேர் பெர்முடா நாட்டவர்கள் என
அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதை அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் கடலோரக் காவல்படைக்கு தெரிவித்தது. இதையடுத்து தீவிர தேடுதல் பணி தொடங்கப்பட்டது. பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு, அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள நான்டக்கெட்
தீவு கடற்பகுதியில் விமானத்துடன் தொடர்புடைய குப்பைகள் மற்றும் பாகங்கள் அடங்கிய பகுதி
கண்டறியப்பட்டதாக அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
6 பேரையும் உயிருடன் மீட்கும் நோக்கில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடலோரக் காவல்படையின் ஒரு கப்பல் இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருடன் பெர்முடா அரசு தொடர்பில் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் டேவிட் பர்ட் தெரிவித்துள்ளார். “அனைத்து 6 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என பிரார்த்திக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.




