மாநிலத்திற்கு வெளியுறவுத்துறை செயலாளரை நியமித்த கேரள அரசு – காங்., பாஜக விமர்சனம்!

மாநிலத்திற்கு வெளியுறவுத்துறை செயலாளரை கேரள அரசு நியமித்துள்ளதால் தனிநாடு கோரிக்கைக்கான முயற்சியா என  பாஜக விமர்சனம் செய்துள்ளது. நமது நாட்டின் வெளியுறவு தொடர்பான விவகாரங்களை மத்திய அரசின் கீழ் இயங்கும் வெளியுறவுத் துறை அமைச்சகம்…

மாநிலத்திற்கு வெளியுறவுத்துறை செயலாளரை கேரள அரசு நியமித்துள்ளதால் தனிநாடு கோரிக்கைக்கான முயற்சியா என  பாஜக விமர்சனம் செய்துள்ளது.

நமது நாட்டின் வெளியுறவு தொடர்பான விவகாரங்களை மத்திய அரசின் கீழ் இயங்கும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கவனித்து வருகிறது. பிற நாடுகளுடனான தொடர்பு மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்யும்  அல்லது கல்வி பயில்வோரின் நலன் குறித்து பணிகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது.
இந்த  நிலையில் கேரள அரசு தங்களின் மாநிலத்துக்கான வெளியுறவுத் துறைச் செயலாளரை நியமித்துள்ளது. பொதுவாகவே வெளியுறவுத்துறை, பாதுகாப்பு, ரயில்வே உள்ளிட்ட முக்கியத் துறைகள் மத்திய அரசிடம் மட்டும்தான் இருக்கும். ஆனால் தற்போது கேரள அரசு தங்களின் மாநிலத்திற்கான வெளியுறவுத் துறை செயலாளரை நியமித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி கே.வாசுகி வெளியுறவு விவகாரங்கள் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று கடந்த 15-ம் தேதி பினராயில் விஜயன் தலைமையிலான கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வெளியுறவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்ட வாசுகிக்கு பொது நிர்வாக துறை உதவும் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுடன் வாசுகி தொடர்பு கொள்ள ஏதுவாக டெல்லியில் உள்ள கேரள இல்லத்தின் ஆணையர் உதவ வேண்டும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரள அரசின் இந்த நடவடிக்கை சர்ச்சையாகியுள்ள நிலையில்  பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து கேரள பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது..

’ கேரள அரசின் இந்த செயல் அரசியல் சாசனத்தை மீறுவதாக உள்ளது. கேரள அரசுக்கு வெளியுறவு விவகாரங்களை கவனிக்க எந்த அதிகாரமும் இல்லை. அரசியல் சாசனத்துக்கு முரணான இந்த நடவடிக்கை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இதன் மூலம் கேரளாவை தனி நாடாக மாற்ற முதலமைச்சர் பினராயி விஜயன் முயல்கிறாரா ?’ என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் எம்.பி சசி தரூர்.. கூறுகையில்  ‘வெளியுறவுத்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசுகள் வெளியுறவு விவகாரங்களில் தலையிட அதிகாரம் இல்லை.ஆனால் வெளிநாடுகளில் உள்ள தங்கள் மாநிலத்தின் மக்கள் தொடர்பான விவகாரங்களில் மாநில அரசு கவனம் செலுத்துவது இயல்பான ஒன்றுதான்.  ஆனாலும் அதற்காக தனியாக ஒரு பதவியை உருவாக்கி அதில் ஒரு தனி நபரை நியமித்துள்ளது வழக்கத்துக்கு மாறாக உள்ளது” என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.