தங்க கடத்தலில் தொடர்பா? – கேரள முதலமைச்சர் விளக்கம்

தங்க கடத்தில் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக, ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், பினராயி விஜயன் அதனை மறுத்துள்ளார். தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ்,…

தங்க கடத்தில் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக, ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், பினராயி விஜயன் அதனை மறுத்துள்ளார்.

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய் கிழமை வாக்குமூலம் அளித்தார். அதில், தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீணா, முதலமைச்சரின் செயலாளர் ரவீந்திரன், அப்போதைய தலைமைச் செயலாளர் நளினி நேட்டோ, அப்போதைய அமைச்சர் ஜலீல் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி இருந்தார்.

ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டை முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், மக்கள் இதை ஏற்கனவே நிராகரித்துவிட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதே குற்றச்சாட்டை சிறிது காலத்திற்கு முன்பு ஸ்வப்னா சுரேஷ் கூறியதாகவும், சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது மீ்ண்டும் கூறி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள பினராயி விஜயன், இதுபோன்ற பொய்களை கூறுவதன் மூலம் அரசு மற்றும் ஆட்சியாளர்களின் உறுதியை குலைக்க சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பினராயி விஜயன் 2016ல் முதலமைச்சராக ஆனதில் இருந்தே இந்த குற்றச்சாட்டு இருந்து வருவதாகத் தெரிவித்துள்ள பினராயி விஜயனின் மருமகனும் கேரள சுற்றுலாத் துறை அமைச்சருமான முகம்மது ரியாஸ், இந்த குற்றச்சாட்டில் எவ்வித ஆதாரமும் இல்லை என்றார்.

இதனிடையே, தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஸ்வப்னா சுரேஷ், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டின் பின்னணியில் பாஜகவும், காங்கிரசும் இருப்பதாக கேரள முன்னாள் அமைச்சர் கே.டி. ஜலீல் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசின் மீதான மதிப்பை சீர்குலைக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.