கேரள மாநிலம் திருக்காகரை சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காலமான காங்கிரஸ் முக்கியத் தலைவரான பி.டி தாமஸின் மனைவி உமா தாமஸ் வெற்றி பெற்றார்.
கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கு இடைத்தேர்தல் தோல்வி பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கேரளத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் ஆளும் அரசுக்கு 99 இடங்கள் உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும் திருக்காகரை எம்எல்ஏவுமான பி.டி.தாமஸ் (71) புற்றுநோய் காரணமாக காலமானார். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவரது மனைவி உமா தாமஸ் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக களமிறக்கப்பட்டார். வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில், அறுதிப் பெரும்பான்மையுடன் அவர் வெற்றி பெற்றார். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஜோ ஜோசப் 47,754 வாக்குகளும், பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 12,957 வாக்குகளும் பெற்றனர்.
உமா தாமஸின் வெற்றியை காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எர்ணாகுளம் மாவட்ட செயலர் சி.என்.மோகனன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இடைத்தேர்தல் தோல்வியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் தேர்வு செய்த வேட்பாளர் சரியான நபர்தான். தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமையாமல் போனது துரதிருஷ்டவசமானதாகும். தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வோம்” என்றார்.
25,000 வாக்குகள் வித்தியாசத்தில் உஷா தாமஸ் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்பு,
அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பென்னி பெஹனன் 2011 இல் 22,406 வாக்குகள் வித்தியாசத்திலும், 2021 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பி.டி.தாமஸ் 14,329 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.







