முக்கியச் செய்திகள் சினிமா

விக்ரம்: திரைவிமர்சனம்

1986ல் தமிழ் சினிமா எங்கும் ஒலித்த ’விக்ரம்’, 32 வருடங்கள் கழித்து தற்போது 2022ல் மீண்டும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க, ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, நரேன், காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

கமல், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைகிறது என்றதுமே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. 2018க்கு பிறகு 4 வருடங்கள் கழித்து கமல் படம் ஒன்று வெளி வருகிறது என்பதோடு, மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்து வரும் ஒரு இளம் இயக்குநருடன் கமல் இணைகிறார் என்பதானாலேயே அனைவரது கவனமும் அந்தப் படத்தின் மீதே இருந்தது. அதோடு, மீண்டும் விக்ரம் என்ற தலைப்பு, ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, அனிருத் இசை, கமல் குரலில் குத்துப் பாட்டு, ட்ரெய்லர், அதில் சூர்யாவின் சிறப்புத் தோற்றம் என்ற அடுத்தடுத்த updateகள் வெளிவர படத்தின் எதிர்பார்ப்பு மேலும் கூடியது. ஆனால், தற்போது ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்பையும் படம் வெளியாகி பூர்த்தி செய்திருக்கிறதா என்றால், ஆம் என்றே சொல்ல வேண்டும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விக்ரம் படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் தனக்கென ஒரு universeஐ உருவாக்குகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே தொடங்குகிறது விக்ரம் திரைப்படம். கைதி திரைப்படத்தில் வலம் வந்த போலீஸ் ஸ்டீபன் ராஜ், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் ஒரு முகமூடி கும்பலால் கொலை செய்யப்படுகின்றனர். அதோடு, கமலும் கொல்லப்படுகிறார். கைதி திரைப்பட கலக்கட்டத்தின் போது, திருச்சியில் பிடிபடும் 900 கிலோ போதை பொருள், போல சென்னையில் 2 லட்சம் கோடி மதிப்புள்ள கண்டைனர் போதை பொருட்கள் காணாமல் போகின்றன. அதற்கு சொந்தக்காரரான சந்தானம் விஜய் சேதுபதி யார் செய்தது என தேட, போதை பொருளையும், கர்ணன் கமலை கொன்ற முகமூடி கும்பலையும் ஃபஹத் ஃபாசிலின் குழுவினர் உதவியோடு கண்டுபிடிக்கத் தொடங்குகிறது தமிழ்நாடு காவல்துறை. அதன் பின் ஏற்படும், திரைக்கதை twistகளே விக்ரம் திரைப்படத்தின் மீதிக் கதை. சுவாரஸ்யமாக, கடகடவென ஓடும் திரைக்கதையே படத்தின் வெற்றிக்கான முக்கியக் காரணம். படமெங்கும், துப்பாக்கித் தோட்டாக்களும், கத்தியும் ரத்தமுமாய் சிதறுகின்றது. ஆக்ஷன் திரைப்படம் என்பதால் படத்தின் ஆரம்பக்காட்சி முதல் இறுதி வரையிலும் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளாகவே நிறைந்திருக்கிறது. குறிப்பாக, கைதி படத்தின் இறுதிகாட்சியில் m134 mini gun ஆக்ஷன் காட்சி போல, இந்த படத்தில் பீரங்கி, m2 browning machine gun காட்சிகளும் templateஆக வந்திருக்கிறது.

பொதுவாக போதை பொருளை சுற்றிய படம் என்றால், அது அதனை தடுத்து நிறுத்துவதோடு ஹீரோ கதாப்பாத்திரங்கள் நின்றுவிடும். ஆனால், விக்ரம் படத்தில், வில்லனை பழிக்கு பழி வாங்குவதை விடவும், இளைஞர்களை பாழாக்கும், போதைக்கு அடிமையாக்கும், உயிரையே கூட கொல்லும் கோரமான போதை பழக்கம், மனிதனை 80 மில்லியன் வருடங்களுக்கு பின்னோக்கி மீண்டும் குரங்காக்கிவிடும் போன்ற வசனங்கள், பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. படத்தோடு வரும் போர்கொண்ட சிங்கம் போன்ற பாடல்களும், ஒபனிங்கில் வரும் பத்தல பத்தல பாடல்கள் ரசிகர்களை ஈர்க்கிறது. ஒன்றியத்தின் தப்பாலே என்ற வரிகள் வருவதற்கு முன்னரே பாடல் நின்றுவிட்டாலும், ஒரு காட்சியில் gst என்ற வார்த்தை censor செய்யப்பட்டது ரசிகர்கர்கள் கவனத்தில் இருந்து தப்பாமல் இல்லை. அனிருத்தின் இசை படத்தின் காட்சிகளை மேலும் மெருகேற்றுகிறது. கிரிஷின் ஒளிப்பதிவு பாராட்டப்பட வேண்டியது. குறிப்பாக mocobot கேமரா பயன்படுத்தப்பட்ட சண்டை காட்சிகள் இது வரை பார்த்திடாத வித்தியாசமான அனுபவத்தை தருகிறது. ஃபிலோமின் ராஜின் படத்தொகுப்பே, படத்தின் சுவாரஸ்யம் குறையாமல் நம்மை இழுத்து செல்கிறது. agent டீனா உட்பட black squad ஏஜெண்டுகளின் அதிரடி ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் கைதி படத்தின் எச்சங்களும் ஆங்காங்கே இடம்பெறுகிறது.

அதுவே lokesh cinematic universeஐ உருவாக்க இயக்குநர் போட்ட ஆரம்பப் புள்ளி. குறிப்பாக சூர்யா வரும் கடைசி 3 நிமிடங்களும் பார்வையாளர்களை சீட்டின் நுணிக்கே தள்ளுகிறது. விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரமும் பழைய pablo escobarஐ ஞாபகப்படுத்துகிறது. கமல், ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி என அனைவரும் போட்டி போட்டு நடிக்க, இறுதியில் லோகேஷ் கனகராஜ் என்ற ஒற்றை நபரின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் அதே நேரம், அடுத்தடுத்த பாகங்கள் எப்போது வரும் என்ற ஆர்வத்தை நிச்சயம் தூண்டியிருக்கிறது விக்ரம் திரைப்படம்!

பிரபாகரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கம்பீரமாக இருப்பதே கலைஞரின் அழகு- வைரமுத்து

G SaravanaKumar

ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் போட்டியின்றி தேர்வு

Arivazhagan Chinnasamy

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது : டெல்லி உயர்நீதிமன்றம்

Halley Karthik