திருமணம் நடக்கும் ஓட்டலுக்கு ஹெலிகாப்டரில் செல்லும் கேத்ரினா – விக்கி!

தங்கள் திருமணம் நடக்கும் நட்சத்திர ஓட்டலுக்கு விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் செல்ல, கேத்ரினா- விக்கி கவுசல் ஜோடி முடிவு செய்துள்ளது. பிரபல இந்தி நடிகை கேத்ரினா கைஃப். 2003 ஆம் ஆண்டு…

தங்கள் திருமணம் நடக்கும் நட்சத்திர ஓட்டலுக்கு விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் செல்ல, கேத்ரினா- விக்கி கவுசல் ஜோடி முடிவு செய்துள்ளது.

பிரபல இந்தி நடிகை கேத்ரினா கைஃப். 2003 ஆம் ஆண்டு வெளியான ’பூம்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தி சினிமாவின் முன்னணி நடிகையான இவர், சல்மான் கான், ரன்பீர் கபூர் உள்பட சில ஹீரோக்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். ரன்பீரும் அவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சில வருடங்களுக்கு முன் தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகை கேத்ரினாவும் இந்தி நடிகர் விக்கி கவுசலும் காதலித்து வந்தனர்.  விக்கி கவுசல், யுரி: த சர்ஜிக்கல் ஸ்டிரைக், மன்மரிஸியான், சஞ்சு, சர்தார் உத்தம் உட்பட சில படங்களில் நடித்துள்ள விக்கி, கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தில் அனுராக் காஷ்யப்பிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

இதற்கிடையே நடிகை கேத்ரினா கைஃப் – விக்கி கவுசல் திருமணம் ராஜஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்சஸ் ஃபோர்ட் பர்வாராவில் வரும் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றன. விக்கியும் கேத்ரினாவும் மும்பையில் இருந்து திருமணத்துக்காக, தனி விமானத்தில் நாளை ஜெய்ப்பூர் செல்கின்றனர்.

அங்கிருந்து திருமணம் நடக்கும் இடத்துக்கு காரில் செல்ல 2-ல் இருந்து இரண்டரை மணி நேரம் ஆகும் என்பதால், விமான நிலையத்தில் இருந்து நேராக திருமணம் நடக்கும் ஓட்டலுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, இவர்கள் திருமணம் குறித்து சவாய் மதோபூர் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் அங்கு வருவார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுக்கு பிரச்னை குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. அதோடு ஒமிக்ரான் அச்சுறுத்தலும் இருப்பதால் திருமண விழாவுக்கு அனுமதிக்கலா, வேண்டாமா என்பது பற்றியும் அவர்கள் இன்று முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.