காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டுக்கொலை – பாதுகாப்பு கேட்டு இந்துக்கள் போராட்டம்

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வங்கிக் கிளை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த விஜய் குமார் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் குமார், குல்காம் மாவட்டத்தின் அரே பகுதியில் உள்ள…

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வங்கிக் கிளை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த விஜய் குமார் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் குமார், குல்காம் மாவட்டத்தின் அரே பகுதியில் உள்ள எலகாஹி தேஹாடி வங்கிக் கிளையில் மேலாளராக சமீபத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

இன்று அவர் பணியில் இருந்தபோது, துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த தீவிரவாதி ஒருவன், விஜய் குமாரை சுட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளான்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த விஜய் குமார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஒரு மாதத்தில் நிகழ்ந்த 8வது கொலை சம்பவம் இது.

படுகொலைகள் குறித்த பட்டியல்

  • மே 7ம் தேதி குலாம் ஹசன் தர் என்ற காவலர் ஸ்ரீநகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
  • மே 12ம் தேதி, புட்காம் மாவட்டத்தின் சதூரா என்ற இடத்தில் ராகுல் பட் என்ற அரசு பணியாளர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
  • மே 13ம் தேதி, தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ரியாஸ் அகமது தோக்கர் என்ற காவல்துறை அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார்.
  • மே 17ம் தேதி வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா நகரில் நிகழ்ந்த கிரெனட் தாக்குதலில் ரஞ்சித் சிங் என்பவர் உயிரிழந்தார்.
  • மே 24ம் தேதி சைஃபுல்லா கத்ரி என்ற காவல்துறை அதிகாரி ஸ்ரீ நகரின் அன்சார் சவுரா என்ற இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
  • மே 25ம் தேதி காஷ்மீரின் குட்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா பகுதியில் தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
  • 31ம் தேதி குல்காம் மாவட்டத்தின் கோபால்போரா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ரஜினி பாலா என்பவர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாதுகாப்பு கேட்டு இந்துக்கள் போராட்டம்

காஷ்மீரில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்படுவது அதிகரித்து வருவதால், தங்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இந்துக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.