காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கம்

30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மீண்டும் திரையரங்கம் அமைய இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரை ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாகவும் வாழ்ந்து வருகின்றனர்.…

30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மீண்டும் திரையரங்கம் அமைய இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரை ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் மாநகராக ஸ்ரீநகர் விளங்குகிறது. 1990களுக்கு முன்பு ஸ்ரீநகர் உள்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் திரையரங்குகள் செயல்பட்டு வந்தன.

தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து 1990 முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் திரையரங்குகள் மூடப்பட்டன.

இதனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திரைப்படங்களை திரையரங்குகளில் பார்க்க ஜம்முவிற்கு வருவது வழக்கமாக உள்ளது.

தற்போது, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டு தீவிரவாத நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து 1990களில் விரட்டி அடிக்கப்பட்ட பண்டிட்டுகள் தற்போது மீண்டும் அங்கு குடியேறி வருகிறார்கள்.

அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனி குடியிருப்புகளை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. அதோடு, அவர்களுக்கு சிறப்பு திட்டத்தின் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அரசு பணிகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், மற்றொரு முக்கிய நிகழ்வாக ஸ்ரீநகரில் மீண்டும் திரையரங்கு அமைய இருக்கிறது. ஐநாக்ஸ் குழுமம் சார்பில் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

மூன்று அரங்குகள் கொண்டதாக இந்த மல்டிபிளக்ஸ் கட்டப்பட்டு வருவதாகவும், மொத்தம் 520 இருக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் இதன் திட்ட மேலாளர் விஷாக் தெரிவித்துள்ளார். நவீன ஒலி அமைப்புகளும் வசதியான இருக்கைகளும் கொண்டதாக இந்த திரையரங்குகள் இருக்கும் குழந்தைகளுக்குப் பிடித்தமான அம்சங்களும் இதில் இடம்பெற இருப்பதாகவும் அவர் கூறினார்.

காஷ்மிர் பள்ளத்தாக்குக்கு வெளியே உள்ள இளைஞர் எத்தகைய சினிமா பொழுதுபோக்கை அனுபவிக்கிறார்களோ அதேபோன்ற அனுபவத்தை பள்ளத்தாக்கில் உள்ள இளைஞர்களும் பெற வேண்டும் எனும் நோக்கில் இந்த மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாக அதன் உரிமையாளரான விஜய் தர் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் வரும் செப்டம்பர் முதல் திரையரங்குகள் செயல்படத் தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.