மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள புதுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த
ராணுவ வீரர் லட்சுமணன் என்பவர் ஜம்மு காஷ்மீரில் ரஜோரி என்ற ராணுவ முகாமில்
நடத்தப்பட்ட பயங்கரவாத தக்குதலில் வீரமரணமடைந்தார்.
அவருடைய உடல் இன்று விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசின் உயர் அதிகாரிகள் பலர் வந்திருந்தினர். அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ராணுவ வீரரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து பாஜக தொண்டர்கள் பலர் அங்கு குவிந்திருந்தனர்.
இந்நிலையில், ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விமான நிலையத்தில்
இருந்து வெளியே செல்லும்போது, அங்கு குவிந்திருந்த பாஜகவினர் திடீரென அவரது காரை மறித்து காலணியை தூக்கி வீசி அடாவடியில் ஈடுபட்டனர்.
உடனடியாக நிதியமைச்சரின் வாகனத்திற்கு பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர்
மறியலில் ஈடுபட இருந்த தொண்டர்களை அப்புறப்படுத்தினர்.
இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் பத்துக்கு மேற்பட்ட பாஜக நிர்வாகிகளை
அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் வீடியோ காட்சிகளில் உள்ள மதுரை
அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் சோலை மணிகண்டன் மற்றும் பெண் நிர்வாகி என மொத்தம் ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீது 147, 341, 353, 355, 506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 147 – பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கலகம் ஏற்படுத்துதல்
- 341- முறையற்ற தடுப்புகள் ஏற்படுத்துதல் (எந்த ஒரு நபரையும் போகவிடாமல் தடுத்து நிறுத்துதல் )
- 353 – பொது ஊழியரை தன்னுடைய பணியை செய்யவிடாமல் தடுத்தல். வன்முறையை தூண்டுதல்
- 355 – மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல்
- 506 – கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு விசிய விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் மதுரை ரயில் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.








