கரூர் அரசுப் பணி வழக்கு : ஜூலை 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…!

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்குவதை எதிர்க்கும் வழக்கில் ஜூலை 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழ் நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்குவதாக தமிழ் நாடு அரசு அறிவித்தது. இதற்கான ஆணையை அண்மையில் முதலமைச்சர் விஜய் வழங்கினார். இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் திண்டுக்கல் வேடசந்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், கரூர் மாவட்டம் கூட்டநெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கவோ, நிர்வாக நடவடிக்கை எடுக்கவோ கூடாது என உத்தரவிடக்கோரி வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத்தரப்பில், பதில் மனு முழுவதுமாக தயாராகவில்லை. ஆகவே ஏற்கனவே உள்ள 3 வழக்கோடு சேர்த்து இந்த வழக்கையும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் ஜூலை 24- க்குள்ளாக பதில் மனுவைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தி வழக்கை ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.