சொத்துக்கள் முடக்கப்பட்டதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடுத்த வழக்கு தள்ளுபடி..!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சொத்துக்கள் முடக்கப்பட்டதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமமானது, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி பெறுவதற்காக வெளிநாட்டு முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்தது. இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் மீது  சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இது தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த 2018ம் ஆண்டு கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு மேல்முறையீடு மீதான விசாரணை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் பாலேஷ் குமார் மற்றும் ராஜேஷ் மல்ஹோத்ரா அமர்வில் நடைபெற்றது.  அப்போது, அமலாக்கத்துறை சொத்துக்களை பறிமுதல் செய்த ஒரு வருடத்திற்கு பிறகே அரசு தரப்பு புகாரை பதிவு செய்ததால், பறிமுதல் நடவடிக்கை சட்டவிரோதம் என கார்த்தி சிதம்பரம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஆனால், அவை கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் இதில் உச்சநீதிமன்றத்தில் முந்தைய உத்தரவின்படி விலக்கு உள்ளது என அமலாக்கத்துறை கூறியது.

இதனை தொடர்ந்து அமலாக்கத்துறையின்  வாதத்தை ஏற்றுக் கொண்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கார்த்தி சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.