கர்நாடக தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது தனிப்பட்ட செல்வாக்கை செலுத்தி வருவதாக, அம்மாநில தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதவிக் காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தலை கவனித்துக் கொள்ளம் பாஜக பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானையும், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையையும், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்தார். இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை அங்கு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படியுங்கள் : லண்டனில் ஜகந்நாதர் கோயில் கட்ட ரூ.250 கோடி நன்கொடை – வியக்க வைத்த ஒடிசா தொழிலதிபர்!
இந்நிலையில், தேர்தல் பணிகளில் அண்ணாமலை தனது தனிப்பட்ட செல்வாக்கை செலுத்தி வருவதாக கர்நாடக காங்கிரஸ், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில், அண்ணாமலை தனக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் ஆகிய பதவிகளை தவறாகப் பயன்படுத்தி, தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாஜக வேட்பாளர்களுக்கு அண்ணாமலை பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும், சிறப்பு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதால் அவரது வாகனத்தை போலீசார் சோதனையிடவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் தேர்தல் பணிகளில் ஈடுபடும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை, வருமான வரித்துறை சோதனை நடத்தப்படும் என்று அண்ணாமலை மிரட்டி வருவதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








