கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்து வருபவர் சமீர் அகமது. இவர் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் சாதி பாகுபாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பூசாரிக்கு உணவை ஊட்டிவிட்டார்.
சாமாராஜ்பேட் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ள பி.இஸட்.சமீர் அகமது, பெங்களூரில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அப்போது, தலித் பூசாரி ஒருவருக்கு அவர் உணவை ஊட்டிவிட்டார். அத்துடன், அவரது வாயிலிருந்து அந்த உணவை எடுத்து தனக்கு ஊட்டிவிடுமாறும் அந்தப் பூசாரியிடம் கூறினார். அதை அந்த பூசாரியும் செய்தார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்ததுடன் கைகளையும் உற்சாகமாகத் தட்டி எம்எல்ஏவின் செயலைப் பாராட்டினர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஹிஜாப் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார் சமீர் அகமது. “இந்தியாவில் பெண்கள் அதிக அளவில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதற்குக் காரணம் ஹிஜாப் அணியாததுதான்” என்று கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. “சிறுமிகள் வளரும்போது அவர்களின் முகத்தை முக்காடு அணிந்து மறைத்துக் கொள்ள வேண்டும். ஹிஜாப் அணிவது கட்டாயமல்ல. இருப்பினும், பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்திருந்தார்.







