மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்
மேகதாது அணை கட்டுவது கர்நாடக மாநிலத்தின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், இரு மாநிலத்தின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் மட்டுமே என்றும் இந்த அணை கட்டுவதால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, இரு மாநிலத்தின் நன்மை மற்றும் விவசாயிகளின் நன்மைக்காகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் இக்கடிதத்தில் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், காவிரியில் தமிழக அரசு ( குந்தா மற்றும் சிலஹல்லா) இரண்டு நீர் மின் நிலைய திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். இதற்காக இதுவரை தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அதேபோன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மேட்டூர் அணைக்குக் கீழ் தமிழக சிறு சிறு நீர் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது, ஆனால் இதற்கும் இதுவரை கர்நாடக அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
எனவே, இரு மாநில நலனுக்காகக் கட்டப்படும் மேகதாது அணைக்கும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். என்ன பிரச்சனையாக இருந்தாலும் இரு மாநில அரசும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும்; அதற்காக இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எடியூரப்பா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ள எடியூரப்பா இரு மாநில உறவுகளை வலுப்படுத்த இணைந்து செயல்படத் தயார் எனவும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







