கர்நாடகா முதலமைச்சர் தேர்வு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டிற்கு வருகை தந்த ராகுல் காந்தி இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி, முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க நேற்று முன்தினம் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் முதலமைச்சர் யார் என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்ய முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தனித்தனியாக எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் மேலிடத்திற்கு அறிக்கை சமர்பித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் முடிவுகளை காங்கிரஸ் தலைமை அறிவிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
முதலமைச்சர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கட்சி மேலிடத்தின் அழைப்பை ஏற்று சித்தராமையா நேற்று டெல்லி சென்றார். அவரைத் தொடர்ந்து டி.கே.சிவக்குமாரும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், உடல்நிலை காரணமாக டி.கே.சிவக்குமாரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை டி.கே.சிவகுமார் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
இந்த நிலையில் கர்நாடக முதல்வரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டிற்கு ராகுல் காந்தி வருகை தந்துள்ளார். இருவரும் கர்நாடக முதலமைச்சர் தேர்வு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
பிற்பகல் 1:30 முதல் 2:00 மணி வரை சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது; இந்த சந்திப்பில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி , பிரியங்கா காந்தி, கே.சி.வேணு கோபால், டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







