கார்ல் மார்க்ஸ் குடும்பமாக இருப்பதை விரும்பவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

கார்ல் மார்க்ஸ் குடும்பமாக இருப்பதை விரும்பவில்லை எனவும், குடும்பம் தனிமனித வளர்ச்சியை தடுக்கும் என அவர் நம்பியதாகவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பொருளாதார வல்லுநரும், பாஜகவின் முன்னோடி தலைவர்களில் ஒருவருமான தீனதாயாள் உபாத்யா…

கார்ல் மார்க்ஸ் குடும்பமாக இருப்பதை விரும்பவில்லை எனவும், குடும்பம் தனிமனித வளர்ச்சியை தடுக்கும் என அவர் நம்பியதாகவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

பொருளாதார வல்லுநரும், பாஜகவின் முன்னோடி தலைவர்களில் ஒருவருமான தீனதாயாள் உபாத்யா குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது:

“கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என கடவுளை பிரார்த்தனை செய்கிறேன். இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த இழப்பை தாங்கும் தைரியத்தை கொடுக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.

ஆங்கிலேயர்கள் நம்மை விட்டு சென்ற நேரத்தில் இந்தியாவில் இருந்த ஜாதிகள் மற்றும் பழங்குடிகள் எண்ணிக்கையை விட தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. 1956-ம் ஆண்டு மதராஸ் பிரிக்கப்படுவதற்கு முன் அனைவரும் ஒன்றாக இருந்தார்கள். அதன் பிறகு ஆங்கிலேயர்களின் சதியாலும் இந்திய தோழர்களாலும் இது போன்ற பிரிவினைகள் உருவாகிவிட்டது. நமக்கு சொந்தமான இடத்தில் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த இடத்தில் தற்போது நம்மை புலம் பெயர்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள்.

ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்தால்தான் நீர் உருவாகும். உலகத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பார்ப்பதால் தான் இடையூறு ஏற்படுகிறது. கார்ல் மார்க்ஸும் தனிமனித வளர்ச்சியில் தான் நம்பிக்கை கொண்டிருந்தார். குடும்பமாக இருப்பதிலும் சமூகமாக இருப்பதிலும் அவர் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் தனிமனித வளர்ச்சியை குடும்பம் தடுக்கும் என்று அவர் நம்பினார். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும், ஆனால் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல.

கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள் நம்முடைய அனைத்து வகையான உணர்ச்சிகளையும் வேதியல் மாற்றம் என்று சொன்னார்கள். அவர்கள் கூறியது இன்று வரை பிரதிபலிக்கிறது. டார்வின் என்கின்ற ஒரு சிறந்த மனிதர் குரங்கிலிருந்து தான் மனிதர்கள் வந்தார்கள் என கூறினார். நாம் அனைவரும் பள்ளி கல்லூரிகளில் என அனைத்திலும் டார்வின் கோட்பாட்டை படித்தோம். அனைவரும் அதை நம்புவதில்லை. டார்வின் முதலாளித்துவத்தின் தார்மீகத்தை நியாயப்படுத்தினார்.

இந்தியர்கள் அனைவரும் ஒரு மரத்தின் ஆயிரக்கணக்கான இலைகள். அனைவரும் ஒரே குடும்பம். மரத்தில் இருந்து இலைகள் பிரிந்து சென்றால் அவைகள் காணாமல் போய்விடும். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். கடற்கரைக்கு செல்லும்போது லட்சக்கணக்கான அலைகள் வருவதை பார்க்கலாம். லட்சக்கணக்கான அலைகள் ஒன்று சேர்ந்தது தான் இந்திய பெருங்கடல்.”

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.