கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு முதலமைச்சர் தலா ரூ.3லட்சமும் , பிரதமர் தலா ரூ.2லட்சமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் வெடித்து சிதறிய தீப்பிழம்புகள் உணவகத்தின் அருகில் உள்ள பட்டாசு குடோனுக்கும் பரவியிருக்கிறது. இதில் அங்கிருந்த பட்டாசுகளில் தீ பற்றவே அவை வெடித்து சிதறியிருக்கின்றன.
அதோடு வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் 3 வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின. உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களும் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர்.இந்த விபத்தில், பட்டாசு கடை உரிமையாளர் ரவி, அவரது மகள் ருத்திகா, மகன் ருத்தீஷ், உணவக உரிமையாளர் ராஜேஸ்வரி, இம்ரான், இப்ராஹிம் உள்ளிட்ட 8 பேர் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிவா என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
மளமளவென பற்றி எரிந்த தீயை, தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி மீட்கப்பட்டனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

பட்டாசு குடோன் விபத்து தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கள் தெரிவித்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3லட்சம் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1லட்சம் அறிவித்திருந்தார். மேலும் பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2லட்சம் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அறிவித்துள்ளார்.







