காரியாபட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக உயர்வு!

விருதுநகர் அருகே காரியாபட்டி வடகரையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை பகுதியில், சிவகாசியை சேர்ந்த ராஜசந்திர சேகரன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் நேற்று காலை வழக்கம் போல் பணியாளர்கள் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த வெடி விபத்தில் ஒரு அறை முற்றிலும் தரைமட்டமானது. இதில் அந்த அறையில் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த கல்குறிச்சியை சேர்ந்த சவுண்டம்மாள் (58), கண்டியணேந்தல் கருப்பையா (35), பேச்சியம்மாள் (40) ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் மூன்று தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பேச்சியம்மாள் (38) என்ற பெண் தொழிலாளியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. விபத்தை தொடர்ந்து ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.