முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

கணியாமூர் வழக்கு; 5 பேருக்கு ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம்

கணியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், இரு ஆசிரியைகள் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணியாமூர் பள்ளி ஜூலை 13-ஆம் தேதி மர்ம மரணம் அடைந்தது குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்ன சேலம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை ஜூலை 17-ஆம் தேதி கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கைதான 5 பேரும் ஜாமீன் கோரிய மனுக்கள் விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மாணவியின் வலது பக்கத்தில் மட்டுமே காயம் உள்ளதாக முதல் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுவதாகவும் நன்றாகப் படிக்குமாறு மட்டுமே ஆசிரியர்கள் கூறியதாகவும், மரணத்தில் எந்த பங்கும் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிபிசிஐடி தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆசன் முகமது ஜின்னா, பள்ளியில் விடுதி அனுமதியின்றி நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், நன்றாகப் படிக்குமாறு அவர்கள் அழுத்தம் கொடுத்ததாகக் கூறி, உயிரிழந்த மாணவி எழுதியதாகக் கூறப்படும் உயிரிழப்புகுறித்த கடிதம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முகாந்திரம் இருப்பதாலேயே ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் மரணம் பள்ளி வளாகத்தில் நடந்துள்ளதால், தீவிரமான வழக்கு என்றும், அதனால் மனுதாரர்கள் தான் பொறுப்பு என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவம் அந்த பள்ளியில் ஏற்கனவே இரண்டு முறை நிகழ்ந்துள்ளன என்றும், கொலை வழக்கு ஒன்றில் தாளாளர் ரவிக்குமார் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, தீவிரமானது என்றால் ஏன் உடனடியாக கைது செய்யவில்லை என்றும், பெற்றோருக்கு உள்ள சந்தேகப்படி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் உள்ளதா என காவல்துறை தரப்பிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு விளக்கம் அளித்த காவல்துறை தரப்பு முதல் மற்றும் இரண்டாவது பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தது.

அண்மைச் செய்தி: ‘‘2026-ல் மிக மோசமான தோல்வியை திமுக சந்திக்கும்’ – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு’

மாணவியின் பெற்றோர் தரப்பில் குறுக்கிட்டு, பள்ளி தாளாளரின் மகன்களிடம் இன்று வரை விசாரணை நடத்தப்படவில்லை எனவும், இரு பிரேதப் பரிசோதனை அறிக்கைகளுக்கும் வேறுபாடுகள் உள்ளதாகவும், உடல் முழுவதும் காயங்கள் உள்ளதாகவும், சில இடங்களில் கைரேகைகள் பதிவாகி உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.உயிரிழப்பு கடிதம் போலியானது என்றும், தங்களது மகள் எழுதியது என்றும் கூறி, இந்த மரணத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரும் உடந்தையாக உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

சிபிசிஐடி தரப்பில் குறுக்கிட்டு மாணவியின் மரணம் கொலையாக எனத் தெரிந்தால், நிச்சயமாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இளந்திரையன், மனுதாரர்கள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு, விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார். அப்போது சிபிசிஐடி தரப்பில் குறுக்கிட்டு, கடுமையான நிபந்தனைகள் விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருமண இணையதளம் மூலம் மோசடி செய்த நபர் கைது

Gayathri Venkatesan

மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்: மருமகனை கத்தியால் குத்திய மாமனார் உள்பட 3 பேர் கைது!

Web Editor

வெள்ள நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமி

Halley Karthik