குமரியில் தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு-2 பேரை தேடி கேரளா விரைந்த தனிப்படை

கன்னியாகுமரி மாவட்டம், கருமல்கூடல் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் மேலும் இருவரை தேடி கேரளாவுக்கு தனிப்படை போலீஸார் விரைந்தனர். கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருகே கருமன்கூடல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்…

கன்னியாகுமரி மாவட்டம், கருமல்கூடல் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல்
குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் மேலும் இருவரை தேடி கேரளாவுக்கு தனிப்படை போலீஸார் விரைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருகே கருமன்கூடல் பகுதியைச் சேர்ந்த
தொழிலதிபர் கல்யாண சுந்தரம் என்பவரது வீட்டிற்கு முன் கடந்த சனிக்கிழமை
இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் இரண்டு பெட்ரோல்
குண்டுகளை வீசி அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதில் வீட்டின் முன்பக்க ஜன்னல் கண்ணாடி உடைந்ததோடு சொகுசு காரும் தீப்பற்றி
எரிந்தது. பெரிய அளவில் சேதம் ஏற்படாத நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக மண்டைக்காடு போலீசார் விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த குமரி காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண்
பிரசாத் குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.


இதனையடுத்து தனிப்படை போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி
காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் 3 நபர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான
குளச்சல் பகுதியை சேர்ந்த ஷமில்கான் என்ற வாலிபரை கைது செய்த தனிப்படை
போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கோவையைப் போன்று கன்னியாகுமரி மாவட்டத்தையும் மக்கள் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் தான் குண்டு வீசினேன் என்று வாக்குமூலம் அளித்தார். அதைத் தொடர்ந்து
இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்

மேலும் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளை தேடி தனி படை போலீசார்
கேரளா விரைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.