ஆன்லைன் ரம்மி விளையாடி பல இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்து வரும் நிலையில், சமூக வலைதளங்களை தங்களது வாழ்க்கையின் மூலதனமாக மாற்றி வருகின்றனர் சென்னை இளைஞர்கள். இவர்களை பற்றி பார்க்கலாம்.
ஸ்டார்டப் நிறுவனங்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், அதில் புதுமையை புகுத்தி வெற்றி காண வேண்டியது இன்றைய இளைய தலைமுறையின் கையில் உள்ளது. இவர்களுக்கு முன்னூதரணமாக Pick My Ad என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம். இவர்கள் அப்படி என்ன செய்துவிட்டார்கள் என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுவது இயல்பே.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. பிரபுதாஸ், நண்பர்களாகிய நாங்கள் 4 பேர் ஒரே கல்லூரியில் படிப்பை முடித்தோம். பின்னர் ஒரு சிலர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தோம். சிலர் மேற்படிப்பு முடித்து விட்டு வேலைக்கு சேர்ந்தனர். பின்னர் இப்படியே எத்தனை நாட்கள் வேலைக்கு செல்வது, நமக்கு என ஒரு தொழிலை உருவாக்க கூடாதா ? என என் நண்பர்கள் அருள்ஜோதி, சிவக்குமார், அருண் பியாஸ் ஆகியோர் யோசித்தோம். யூடிப் சேனல் ஆரம்பித்தால் நல்ல வருமானம் வரும் என கருதினோம்.
இப்போதே பல சேனல்கள் உள்ளன. அதில் போட்டி போட்டு ஜெயிப்பது என்பது கடினமான காரியமாக எங்களுக்குள் தோன்றியது. நாம் புதுமையாக ஏதாவது யோசித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் எனக் கருதி, எங்களுக்குள் உதித்த திட்டம்தான் Pick My Ad ஆகும். இதில் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்களை (Influencer) கண்டறிந்தோம். இவர்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பொருட்கள் குறித்து அவர்களது சமூக வலைதள பக்கங்களில் ரிவியூ கொடுக்க பணம் பெற்று வருவதையும் அறிந்தோம். இப்படி புதிய பொருட்கள் குறித்து ரிவியூ கொடுப்பவர்கள் பற்றிய புள்ளி விபரங்களை சேகரிக்க தொடங்கினோம்.
அந்த வகையில் தற்போது தென்னிந்திய மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளை சேர்ந்த சோசியல் மீடியா இன்புலின்சர்களான சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குறித்த டேட்டா எங்களிடம் உள்ளது. இவர்களது சோசியல் மீடியா பக்கங்களில் எங்களது நிறுவனம் மூலம் கட்டணம் செலுத்தி தங்களது பொருட்களை விளம்பரம் செய்து கொள்ளலாம்.
இதில் என்ன புதுமை இருக்கிறது. விளம்பரம் செய்ய விரும்புவர்கள் இன்புலின்சரிடம் நேரடியாகவே பணம் கொடுத்து விளம்பரம் செய்யலாமே ? என நாம் கேட்டபோது, உண்மைதான், நீங்களே நேரடியாக விளம்பரம் செய்து கொள்ளலாம். ஆனால் எந்த சேனலில் விளம்பரம் செய்தால் உங்கள் பொருட்களுக்கு அதிகளவு ரீச் கிடைக்கும் என்ற நுணுக்கமான புள்ளி விபரங்களை அவர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்களிடம் அப்படியல்ல. அதுமட்டுமில்லாமல், எல்லா இன்புலின்சரை பற்றியும் விளம்பரம் கொடுப்பவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
எங்களிடம் தென்னக மொழியில் எந்த மொழியில் வேண்டுமென்றாலும் விளம்பரம் கொடுக்க முடியும். உங்களுக்கு எல்லா மொழியில் உள்ள இன்புல்சரையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு கட்டணமாக இன்புலின்சர் கேட்கும் தொகையில் 10 சதவீதம் எங்களுக்கு கமிஷனாக கொடுக்க வேண்டும். இது மிகவும் குறைவான தொகை என்றே நாங்கள் கருதுகிறோம். பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தால் ஒரு நாள்தான் வரும். சமூக வலைதளங்களில் விளம்பரம் கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் அந்த விளம்பரம் சோசியல் மீடியாவில் இருக்கும் என்றார்.
இவர்களது முயற்சியை பார்த்து கிஸ் ஃபிளோ சுரேஷ் சம்பந்தம், எம்2பி நிறுவனர் பிரபு உள்ளிட்ட பலர் இவர்களது நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்ய முன் வந்துள்ளனர்.
இராமானுஜம்.கி









