பிரசவத்திற்கு பின் அதீத உதிரப்போக்கால் உயிரிழப்பு:இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் அதீத உதிரப்போக்கால் உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்காமங்கலத்தைச் சேர்ந்த…

ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் அதீத உதிரப்போக்கால் உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்காமங்கலத்தைச் சேர்ந்த ராஜகோபால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ கடந்த 25.6.2012-ல் என் மனைவியை ராஜக்காமங்கலம் ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தேன். மறுநாள் காலை பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவத்திற்குப் பின் அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டது.

உடனே என் மனைவியை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என கூறினார்கள். அங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லை. காலை 6 மணிக்கு வரவேண்டிய ஆம்புலன்ஸ் 6.30 மணிக்குதான் வந்தது. இதனால் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்குத் தாமதமாகச் சென்றோம்.

சிகிச்சைக்குத் தொடங்கி சிறிது நேரத்தில் என் மனைவி இறந்துவிட்டார். பிரசவத்திற்கு பிந்தைய அதீத உதிரப்போக்கால், உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால்தான் என் மனைவி இறந்தார். எனவே, என் மனைவி இறப்புக்காக 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்,” இந்தியாவை பொறுத்தவரை 4 முதல் 6 சதவீத பிரசவங்களுக்குப் பிறகு அதீத உதிரப்போக்கால் உயிரிழக்க நேரிடுவதாகக் கூறப்படுகிறது.

ராஜகோபாலின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் இல்லாததுதான் பிரச்சினைக்கு முதன்மை காரணமாக இருந்துள்ளது. தாமதமின்றி அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு மாற்றியிருந்தால் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்.

இதில், ஒவ்வொரு வினாடியும் மிகவும் முக்கியம். இதுபோன்ற நேரத்தில் ஒவ்வொரு ஆரம்பச் சுகாதார நிலையத்திலும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இருக்க கூடாது. காத்திருந்த நேரத்தில் அதிகளவு ரத்தம் வெளியேறியதே இறப்புக்குக் காரணமாகியுள்ளது.

எனவே, பொதுச் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் தரப்பில் மனுதாரருக்கு 5 லட்சத்தை இழப்பீடாக 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.