போதையில் அரசுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்: கடைசி நிமிடத்தில் உயிர்தப்பிய பயணிகள்

ராமேஸ்வரத்தில் மதுபோதையில் அரசு ஓட்டுநர் பேருந்தை ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்வதற்காக அரசு பேருந்தை ஓட்டுனர் பால்சாமி என்பவர் நேற்று பிற்பகல்…

ராமேஸ்வரத்தில் மதுபோதையில் அரசு ஓட்டுநர் பேருந்தை ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்வதற்காக அரசு பேருந்தை ஓட்டுனர் பால்சாமி என்பவர் நேற்று பிற்பகல் சுமார் 1:15 மணியளவில் எடுத்துள்ளார். ஆனால் அவர் பணிக்கு வருவதற்கு முன்பு மது அருந்தியிருக்கிறார் என்பதை நடத்துனரும், பயணிகளும் பேருந்து கிளம்பிய பிறகு அறிந்துள்ளனர். பேருந்தை ஓட்டிய பால்சாமி நிதானம் இல்லாமல் வேகமாக பேருந்தை இயக்கியுள்ளார். இதனால் பேருந்து ராமேஸ்வரத்தை கடந்து தங்கச்சிமடம் காவல்நிலையத்திற்கு அருகே வரும்போது, காவல்நிலையத்திற்கு எதிரே இருந்த சுவரின் மீது மோதி சுமார் 100 அடி தூரத்திற்கு பேருந்து இழுத்துச் செல்லப்பட்டது.

சுவரில் மோதியதால் உடைந்த பேருந்தின் முன் பகுதி

இதனால், பேருந்தில் இருந்த பயணிகள், பேருந்தை நிறுத்துமாறு கத்தி கூச்சலிட்டுள்ளனர். ஆனால், ஓட்டுநர் பால்சாமியோ பேருந்தை நிறுத்தாமல் ஓட்டியுள்ளார். நடத்துனர் பேருந்தை நிறுத்த வலியுறுத்திக் கூறியும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து சென்ற பேருந்து பாம்பன் பாலம் அருகே வந்துள்ளது. பாம்பன் பாலத்தில் செல்லும் போது ஏதேனும் விபரீதம் நடந்தால், பேருந்தில் இருக்கும் அனைவரின் உயிருக்குமே ஆபத்து ஏற்படலாம் என்பதால் நடத்துனர் மற்றும் பயணிகள் பேருந்தை உடனடியாக நிறுத்துமாறு கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதன் பிறகு பாம்பன் பாலத்திற்கு முன்பாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். பின்னர் பயணிகள் அனைவரும் மாற்றுப் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து குடிபோதையிலிருந்த ஓட்டுநரை போலீசார் தங்கச்சிமடம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.