தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட மாட்டாது: கனிமொழி

தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உறுதி தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக மேற்கொள்ளப்பட்டு வந்த மார்பக பரிசோதனை முகாமின்…

தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உறுதி தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக மேற்கொள்ளப்பட்டு வந்த மார்பக பரிசோதனை முகாமின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய அவர், ஒரு மாதம் நடைபெற்ற இந்தப் பரிசோதனை முகாமில் 650 பெண்களுக்கு மார்பக பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் 22 பேருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், புதிய கல்விக்கொள்கை குறித்து கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த கனிமொழி, புதிய கல்வி கொள்கை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட மாட்டாது என்றும், தனது கொள்கையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாறமாட்டார் எனவும் உறுதியளித்தார். எதிர்க்கட்சியாக இருந்தபோதே இதுகுறித்து ஆராய்ந்து அதிலுள்ள பாதகங்களை பட்டியிலிட்டு திமுக எம்.பி.க்கள் மூலம் மத்திய அமைச்சரிடம் வழங்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் அவர் தெரிவித்தார். ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவிக்கப்பட்டதை தாம் வரவேற்பதாகவும் கனிமொழி எம்.பி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.