கந்தசஷ்டி விழா – திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உலகப் புகழ் பெற்ற கந்த சஷ்டி திருவிழாவின் 6-ம் நாள் திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவில் சாமிக்கு அபிசேகம், தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல், தங்கத்தேர் வீதி உலா நடைபெறுகிறது. இந்த நிலையில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று மாலை கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது. விழாவையொட்டி அங்கு பக்தர்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கடலில் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு மிதவை தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

7-ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் அருணாசலம் மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளதால் விழா களைகட்டி உள்ளது..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.