பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசனை, அரசு விருந்தினராக இலங்கைக்கு வருமாறு கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த மே-17ம் தேதி இலங்கை கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமனம் செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே ஊவா மாகாண முதலமைச்சர், அமைச்சர் மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் என பல பதவிகளை வகித்துள்ளார்.
புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள செந்தில் தொண்டமானுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், செந்தில் தொண்டமான் சேவைக் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து எண்ணற்ற சேவைகளை செய்ய வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக கூறினார்.
தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசனை, அரசு விருந்தினராக இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு வருமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார். கமல்ஹாசன், செந்தில் தொண்டமானின் அழைப்பை ஏற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் அவர் இலங்கை செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







