ஆகஸ்டு 15-ஆம் தேதியன்று கிராமசபைக் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுத்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகரு மான கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வி அடைந்தார். இதையடுத்து தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் அவர் நேற்று கோவை சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் அவருக்கு கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், இன்று காலை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து, கிராமசபை கூட்டம் நடத்துவது குறித்து மனு ஒன்றை கமல்ஹாசன் அளித்தார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், கிராம சபை கூட்டங்களை நடத்த கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்’ என்றார்.
இதுபற்றி ட்விட்டரில் கூறியுள்ள அவர், ஆகஸ்டு 15-ஆம் தேதியன்று கிராமசபைக் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு கொடுத்தேன். தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுக்க உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.








