முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

விண்வெளி பறவை கல்பனா சாவ்லாவிற்கு 60வது பிறந்தநாள்

மேகங்களை கடந்து விண்ணை தொட அனைவருக்கும் ஆசை உண்டு. ஆனால், சிலரால் மட்டுமே அது சாத்தியமாகிறது. அப்படியாக ஒரு முறையல்ல, இரு முறை விண்ணை தொட்ட வீராங்கனை தான் கல்பனா சாவ்லா. கல்பனா சாவ்லா உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு மட்டுமல்ல, விண்வெளி வீரராக விரும்பும் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்தார்.

ஜூலை 1, 1961ஆம் ஆண்டு ஹரியானாவின் கர்னலில் பிறந்து, ஒரு சிறிய வீட்டில் நட்சத்திரங்களுக்கு அடியில் படுத்துறங்கியபோது , ஒரு நாள் அந்த நட்சத்திரங்களை தொட்டுவிட வேண்டும் என கனவு கண்டார் கல்பனா சாவ்லா. 1982 ஆம் ஆண்டு, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர், 1988ஆம் ஆண்டு நாசா அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றத் தொடங்கி, பல ஆராய்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கல்பனா சாவ்லாவிற்கு விண்வெளி ஆராய்ச்சியில் மட்டுமல்லாது, கவிதை, நடனம், மிதிவண்டி பயணம், நடைபயற்சி போன்றவற்றில் ஆர்வம் உண்டு.

1995ம் ஆண்டு பயிற்சிகள் முடிந்து விண்வெளி வீராங்கனையாக தகுதி பெற்ற கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம் 1997ம் ஆண்டு நிகழ்ந்தது. 1997 நவம்பர் 19ம் தேதி தனது முதல் விண்வெளி பயணத்தை தொடங்கிய அவர் , ஒரு மிஷன் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் முதன்மை ரோபோ கை ஆபரேட்டராக பணிபுரிந்தார். முதல் இந்திய-அமெரிக்க விண்வெளி வீரர் மட்டுமல்லாது, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார் கல்பனா சாவ்லா.

பூமியை 1 கோடியே 40 லட்சம் மைல்களுக்கு, 252 முறைக்கு மேல் சுற்றிவந்ததன் மூலம், 372 மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளியில் பயணம் செய்து திரும்பியுள்ளார் கல்பனா சாவ்லா. 2003 ஆம் ஆண்டு, எஸ்.டி.எஸ் -107 இன் குழுவினரில் ஒருவராக, மீண்டும் தனது இரண்டாவது விண்வெளி பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் கல்பனா சாவ்லா. ஜனவரி தொடங்கிய கல்பனா சாவ்லாவின் இந்த பயணம், துரதிர்ஷ்டவசமாக பிப்ரவரியில் முடிவடைந்தது.

விண்வெளியில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட குழுவினர் பயணத்தை முடித்துக்கொண்டு, திட்டமிட்டபடி பிப்ரவரி ஒன்றாம் தேதி பூமியில் தரையிறங்க ஆயத்தமானார்கள். எஸ்.டி.எஸ் -107 பூமியைத் தொட 16 நிமிடங்களே இருந்த நிலையில், அந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறி, வீராங்கனை கல்பனா சாவ்லாவின் மரணத்திற்கு வழிவகுத்தது. கண் இமைக்கும் சில நொடிகளுக்குள் காற்றில் கரைந்தார் கல்பனா சாவ்லா.

கல்பனா சாவ்லாவின் சாதனைகளை நினைவு கூறும் வகையில், 2011ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், வீரதீர சாதனைகள் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி, இந்திய அரசு கவுரவப்படுத்துகிறது.

இன்றோடு அந்த விண்வெளி பறவை பிறந்து 60 ஆண்டுகள் ஆகும் நிலையில், “நம் குறிக்கோள் எவ்வளவு முக்கியமானதோ, அதே போல குறிக்கோளை அடைய, நாம் தேர்ந்தெடுக்கும் பாதையும், பயணமும் முக்கியமானது” என கல்பனா சாவ்லாவின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளில் இன்றும் பயணிக்கின்றனர், அவரை ரோல் மாடலாக கருதும் நம் வீட்டு மழலை செல்வங்கள்.

Advertisement:

Related posts

“என்ஞாயி எஞ்ஞாமி” இசைநாயகனுக்கு பிறந்தநாள்!

Vandhana

டேனிஷ் சித்திக் மரணத்திற்கு நாங்கள் காரணமில்லை- தாலிபான் மறுப்பு

இளம் பெண் உயிரிழப்பு குற்றச்சாட்டில் சிக்கிய மகாராஷ்டிரா அமைச்சர் ராஜினாமா!

Ezhilarasan