கள்ளக்குறிச்சி கலவரம்; கைது நடவடிக்கை தீவிரம்

கள்ளக்குறிச்சி வன்முறையில், ஈடுபட பைக் மற்றும் பிற வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டது சிறப்பு விசாரணைக் குழு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி சந்தேக மரண வழக்கில்…

கள்ளக்குறிச்சி வன்முறையில், ஈடுபட பைக் மற்றும் பிற வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டது சிறப்பு விசாரணைக் குழு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி சந்தேக மரண வழக்கில் நீதி கேட்டு நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் தனியார்ப் பள்ளி சூறையாடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வன்முறை வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காகச் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தார் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு.

சேலம் சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநவ் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் 6 டி.எஸ்.பிக்கள், 9 ஆய்வாளர்கள், மூன்று சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் இடம் பெற்றுள்ளனர். மேலும் கடலூர், வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 12 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 56 பேர் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு விசாரணையை நடத்தி வருகின்றனர். இவர்கள் 3 பிரிவுகளாகப் பிரிந்து பணியாற்றி வருகின்றனர்.

அண்மைச் செய்தி: ‘அம்பேத்கர் புகைப்படம் வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி’

இந்த குழுவில் சைபர் கிரைம் பிரிவில் திறம்படச் செயல்படும் ஒரு தலைமைக்காவலர், 2 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், தொழில்நுட்ப ஆதாரங்களைத் திட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த தனியார்ப் பள்ளிக்கு வன்முறையில் ஈடுபடப் பலர் பைக்குக்கள், கார்கள் போன்ற வாகனங்களில் வந்துள்ளது தொடர்பான வீடியோக்கள், சிசிடிவி காட்சிகளைச் சிறப்பு விசாரணைக் குழு கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் வந்த வாகனங்களின் எண்களை வைத்து சுமார் 50-க்கும் மேற்பட்டோரைச் சிறப்பு விசாரணைக்குழு கண்டறிந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையினர் கண்டறியும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், கிடைக்கப்பெற்ற முகவரிகளை வைத்து கைது செய்யும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வன்முறையாளர்கள் வந்திருப்பதும், பள்ளியின் பின்புறம் வழியாகவும் அதிகம் பேர் நுழைந்து இருப்பதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.