கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு சமூக வலைதளங்களில் போராட அழைப்பு விடுப்பவர்களுக்கு சென்னை காவல் துறையினர் கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிக தீவிரமடைந்து வன்முறையாக மாறியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் போராட்டக்காரர்கள் பள்ளியின் பேருந்தை டிராக்டரால், சேதப்படுத்தினர். பள்ளியில் உள்ள பொருட்களையும் சூறையாடினர். இதுமட்டும் இல்லாமல் இந்த வன்முறையில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதில் 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பள்ளி வாகனங்கள், மேஜைகள், கண்ணாடிகள் என கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் போராட்டக்காராக்கள் அடித்து நொறுக்கி, எரித்து சாம்பலாக்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட 379 பேரை போலீசார் கைது செய்தனர். 125 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீமதி இறப்பு குறித்து இன்று காலை Justice for srimathi என்று கூறி சிலர் சமூக வலைதள அழைப்புகள் மூலமாக சென்னையில் கூடுவதற்கு வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மூலமாக கூடும் இட விவரங்களை அனுப்பியுள்ளது.
இது குறித்து சென்னை காவல் துறையின் உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சென்னை நோக்கி வருபவர்களையும் சென்னையில் இருந்து கொண்டு அழைப்புகள் மூலம் உதவுவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வாகன சோதனை மூலமாக கண்காணிப்பு தொடர்கிறது. சென்னை நகரை காவல்துறையினர் கண்காணிப்பில்கொண்டு வந்துள்ளனர். இதுபோன்ற தவறான செய்திகலை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
மெரினாவில் பலத்த பாதுகாப்பு
மாணவி ஸ்ரீமதிக்கு நீதிகோரி இளைஞர்கள் திரள வாய்ப்புள்ளதால், சென்னை மெரினா கடற்கரை சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம் முதல் தலைமைச் செயலகம் வரை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.