கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – வெளியான மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு எதிர்க் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே விஷச்சாராயம் விற்பனை செய்த கன்னுக்குட்டி என்பவரும் அவரது மனைவியும் கைதாகியுள்ளனர்.  அதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும்,  சிகிச்சையில் இருப்பவர்களுக்கு 50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.  மேலும் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில்,  விஷச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளியான சின்னத்துரையின் சொந்த கிராமமான சேஷசமுத்திரத்திலும் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.  சேஷசமுத்திரத்தில் சின்னத்துரையிடம் கள்ளச்சாராயம் வாங்கி பருகியவர்கள் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை தொடர்ந்து சேஷசமுத்திரத்திலும் விஷச்சாராய விற்பனை நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.  விஷச்சாராய வழக்கில் குற்றவாளி கன்னுக்குட்டிக்கு சாராயம் கொடுத்த சின்னத்துரையின் சொந்த கிராமத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.