கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் உடைமாற்றும் அறையில் செல்போன் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மேலவீதியில் ரிலையண்ஸ் நிறுவனத்தின் துணி நிறுவனமான ட்ரெண்ட்ஸ் துணிக்கடை அமைந்துள்ளது. அப்பகுதியில் மிகவும் பிரபலமான இந்நிறுவனத்தில் துணி வாங்க தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வர். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி இக்கடையிலுள்ள உடைமாற்றும் அறையில் சென்ற இரண்டு வாடிக்கையாளர்கள் அங்கு செல்போன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அங்கிருந்த ஊழியர்களுக்கு தகவலளித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருக்கோவிலூர் போலீசார் கடந்த இரு நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் புதிய திருப்பமாக கடையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் விக்னேஷ் என்பவர் செல்போனை வைத்தது கண்டறியப்பட்டது.
மேலும் அவருக்கு உடந்தையாக அதே கடையில் வேலை செய்யும் அவரது சகோதரி உதயா என்பவர் மெமரி கார்டை மாற்றி கொடுத்து வந்ததும் கண்டறியப்பட்டது. இந்த இருவர் மீதும் புகாரளிக்காமல் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி கடையின் கிளை மேலாளர் ஏழுமலை ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைக்காக மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
– வேந்தன்







