கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவுக்கான நிகழ்ச்சிக்கான பட்டியலை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கள்ளழகர் தங்ககுதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்கும் வைபவம் மே 5ம் தேதி நடக்கிறது.
மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்களின் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்று சித்திரை திருவிழா. இதில் முக்கிய நிகழ்ச்சிகளாக பார்க்கப்படும் மீனாட்சிக் திருக்கல்யாணமும், அழகரின் வைகை ஆற்று வைபவமும் மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட ஒன்று. ஒரு மாதம் முழுவதும் தயாராகி அதிக நாட்கள் கொண்டாடப்படும் ஒரே திருவிழா சித்திரை திருவிழா தான்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. மதுரை சித்திரை திருவிழா வரும் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 16 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழாவின் போது மதுரை நகரமே விழாக் கோலம் பூண்டிருக்கும்.
இந்நிலையில் கள்ளழகர் சித்திரை திருவிழாவின் நிகழ்ச்சி நிரல் பட்டியலை அழகர்கோயில் நிர்வாகம் வெளியிட்டது. மே 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை அழகர்கோயில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது மே 3 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தங்கப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் சுந்தரராஜ பெருமாள் மதுரையை நோக்கி புறப்படுகிறார்.
மே 4 ஆம் காலை 6 மணிக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறும். மே 5ம் தேதி காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் கள்ளழகர் தங்ககுதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளுகிறார். மே 6ம் தேதி காலை 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுகிறார்.
மே 6ம் தேதி மாலை 3 மணிக்கு தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். மே 6ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் விடிய விடிய இராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 7ம் தேதி காலை 6 மணிக்கு கள்ளழகர் மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
மே 7ம் தேதி பகல் 2 மணிக்கு கள்ளழகர் இராஜாங்க அலங்காரத்துடன் அனந்தராயர் பல்லகில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். மே 8ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு இராமநாதபுரம் மன்னர் சேதபதி மண்டபத்தில் கள்ளழகர் பூப்பல்லக்கில் அழகர்கோயில் நோக்கி புறப்படுகிறார். மே 9ம் தேதி காலை 10.32 மணிக்கு கள்ளழகர் அழகர் கோயிலுக்கு வந்தடைகிறார்.









