தமிழ்நாட்டில் முதல் முறையாக கருணாநிதியின் புகைப்படத்துடன் கலைஞர் குடிநீர் பாட்டில்கள் விற்பனை மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன்பு வரை குடிநீரை விலைக்கு வாங்கும் காலம் வரும் என கூறினால், அதனை பொருட்படுத்தாமல் அனைவரும் நகைப்புடன் தான் கடந்திருப்போம். கால மாற்றத்திற்கு ஏற்ப தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு நாம் இப்போது தள்ளப்பட்டுள்ளோம். குடிநீரை விலைக்கு வாங்குவதன் மூலம் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டு வரப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய அம்மா குடிநீர் திட்டம், அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் பயண நேரங்களில் பெரிதும் உதவியது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பின்னர், அம்மா குடிநீர் திட்டம் பெரிய அளவில் விரிவுபடுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், மதுரையில் கலைஞர் குடிநீர் என்ற பெயரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்துடன் குடிநீர் பாட்டில்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.
அரசு திட்டமாக இல்லாமல், தனிநபர் ஒருவர் கலைஞர் குடிநீர் என்ற பெயரில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்வதாக தெரிகிறது. இதனிடையே தனிநபர் ஒருவர் இது போன்று தலைவர்களின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்தலாமா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. இது குறித்து குடிநீர் பாட்டிலில் இடம்பெற்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கேட்டபோது முதன்முறையாக விளம்பரத்திற்காக மதுரையில் விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் விரைவில் அங்கிகாரத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் விளக்கமளித்தார்.