தற்காலிக சபாநாயகராக முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி நியமிக்கப் பட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை பதவியேற்றது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்கள் மே 11- ஆம் தேதி பதவியேற்க இருக்கின்றனர். 12-ஆம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர்.
இந்நிலையில், கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டசபை உறுப்பினர் கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவரை நியமித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆளுநர், கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக நியமித்துள்ளார். அவர், 10.05.2021 திங்கட் கிழமை காலை 11.00 மணிக்கு ஆளுநர் முன் உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1989, 1996, 2001, 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில், திருவண்ணாமலை தொகுதியிலிருந்து, திமுக சார்பில் போட்டியிட்டு, 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் கு.பிச்சாண்டி. 1996 முதல் 2001 வரை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.







