கே.பி. பார்க் வீடுகள் சேதார விவகாரம் – சென்னை மாநகராட்சி விளக்கம்

புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கட்டட சேதாரங்களுக்கு சென்னை மாநகராட்சி பொறுப்பேற்காது என தலைமை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியில், கே.பி. பார்க் என்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கள், பயனாளிகள்…

புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கட்டட சேதாரங்களுக்கு சென்னை மாநகராட்சி பொறுப்பேற்காது என தலைமை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியில், கே.பி. பார்க் என்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கள், பயனாளிகள் பங்களிப்புடன் கட்டப்பட்டது. இந்த குடியிருப்புகள் தரமற்ற வகையில் கட்டப்பட்டுள்ளதாகவும், சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து, அமைச்சர்கள், அதிகாரிகள் குடியிருப்புக்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த விவகாரம், சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரன், கட்டடங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணிகள் ஐஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, புளியந்தோப்பு குடியிருப்புகளில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு கட்டுமான குறைபாடுகளோ அல்லது தரமற்ற பொருட்களோ காரணமல்ல எனவும், கட்டடத்தை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக பயன்படுத்தியதால் தான் சேதாரம் ஏற்பட்டதாக அந்த குடியிருப்பை கட்டிய பிஎஸ்டி நிறுவனம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், கொரோனா தனிமைப்படுத்துதல் மையமாக அந்த கட்டடம் பயன்படுத்தப்பட்ட காலத்தில், கட்டில், மெத்தை போன்ற இலகுவான உபகரணங்கள் தான் பயன்படுத்தப்பட்டது. அதனை கொண்டு சென்றபோதோ அல்லது குடியிருப்பை பயன்படுத்தியதாலோ கட்டடத்தில் சேதாரம் ஏற்படவில்லை என்றும் குடியிருப்பு கட்டடத்தில் உள்ள சேதராங்களுக்கு சென்னை மாநகராட்சி காரணமல்ல என்றும் மாநகராட்சியின் தலைமை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.