ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மக்கள் அனைவருக்கும், ஓணம் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாதி, மத, இன பேதமின்றி கேரள மக்கள் ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். நாளை மறுநாளுடன் ஓணம் திருவிழா நிறைவடைய உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஓணம் பண்டிகை கொண்டாடும் மலையாள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அறுவடை திருநாள் எனப்படும் ஓணம் பண்டிகை, கேரள மாநிலத்தில், ஆவணி மாதம் முதல் நாளில் அத்தப் பூ கோலமிட்டு சிறப்பாக கொண்டாடப்படுவதாகவும், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக ஓணம் பண்டிகை திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாழும் மலையாள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பும், மரியாதையும் அளித்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓணம் பண்டிகைக்காக 2006ம் ஆண்டே சிறப்பு விடுமுறை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு மலையாள சங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று சென்னை மாநகரத்திற்கும் உள்ளூர் விடுமுறை என்று கடந்த 14.08.2007 அன்று கருணாநிதி அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்பிற்கும், ஈகை பண்பிற்கும் அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில், தமிழ்நாட்டில் வாழும் மலையாள மக்களும், கேரள மக்களும் நலமிகு வாழ்வும் அனைத்து வளங்களும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என வாழ்த்துவதாக மு.க.ஸ்டாலின் தெரித்துள்ளார்.
அன்பிற்கும், ஈகைப் பண்பிற்கும் மிகச் சிறந்த அடையாளம் ஓணம் திருநாள்!
மக்களின் அன்பைப் பெற்ற மாவலி மன்னரை அத்தப்பூ கோலமிட்டு வரவேற்கும் மலையாள உடன்பிறப்புகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகள்!#ഓണംആശംസകൾ pic.twitter.com/RpJZqG8Ded
— M.K.Stalin (@mkstalin) August 21, 2021







