முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜூலை 7 ஆம் தேதி முதல் ஒரு மில்லியன் ஜியோ பாரத் போன்களுக்கான பீட்டா சோதனையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் 2ஜி நெட்வொர்க்கை 25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களை இலக்கு வைத்து அப்படியே 4ஜி நெட்வொர்க்குக்கு கொண்டு வரும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் போன் பிளாட்ஃபார்மை அறிமுகம் செய்தது. இந்த பிரான்டிங்கில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் 4ஜி ஃபீச்சர் போன் மாடல்களை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது “ஜியோ பாரத்” வி2 போன் என்ற கைபேசியை, வெறும் 999 ரூபாயில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற போன்கள் தற்போதுள்ள மக்களில் 25 கோடி பேருக்கு, 4ஜி இணைய வசதி கொண்ட போன்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற ஜூலை 7 ஆம் தேதி முதல் இந்த “ஜியோ பாரத்” வி2 போன்கள் சந்தையில் அறிமுகமாக உள்ள நிலையில், முதல் கட்டமாக 10 லட்சம் ஜியோ பாரத் போன்கள் நாட்டின் பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் விற்பனைக்கு இறக்கப்படுகிறது.
4ஜி ஸ்மார்ட்போன் ஃபீச்சருடன் ரெட் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ள இந்த போன், ஜியோவின் முந்தைய ஜியோஃபோன்களைப் போலவே, ஜியோ சினிமா மற்றும் ஜியோ சாவ்னுடன் OTT சேவையை இணைத்தல் உட்பட பல அம்சங்களை கொண்டுள்ளது. அத்துடன் ரீ சார்ஜ் கட்டணங்களிலும் அசத்தல் சலுகைகளை அள்ளி தெறிக்கவிட்டுள்ள ஜியோ நிறுவனம் மற்ற சேவை நிறுவனங்களை ஒப்பிடும்போது, 30 சதவீதம் மலிவான மாதாந்திர திட்ட கட்டணங்களையும், ஏழு மடங்கு அதிக டேட்டாவையும் பயனர்களுக்கு வழங்க உள்ளது.
குறிப்பாக, ரிலையன்ஸ் ஜியோ பாரத் மாதாந்திர கட்டணங்களின் ஆரம்ப விலை ரூ. 123 முதல் துவங்குவதோடு, இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் வரை கொடுக்கப்படுகிறது. மேலும் இதில் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜிபி டேட்டா என்ற அடிப்படையில் மாதம் 14 ஜிபி டேட்டா என பல வசதிகள் மற்ற சேவையை ஒப்பிடும்போது மிக அதிக படியாகவே வழங்கப்படுகிறது. கூடுதலாக, இது உயர் வரையறை அழைப்பு, கேமரா திறன்கள் மற்றும் ஜியோபே சேவை ஆகியவற்றைக் கொண்டு, பயனர்கள் UPI மூலம் பணம் செலுத்தும் வசதியும் இதில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தவிர ஒரு ஆண்டுக்கு ரூ1234 ரீசார்ஜ் செலுத்தினால் அன்லிமிடெட் கால்ஸ் பிளஸ் 168 ஜிபி டேட்டா பெற முடியும் என்கிறது ஜியோ நிறுவனம்.
- பி.ஜேம்ஸ் லிசா









