கேரளாவின் தலைநகரை திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு மாற்றுவது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடன் தாக்கல் செய்த தனிநபர் மசோதாவிற்கு அக்கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்தனர்.
கேரளாவின் தலைநகர் மாற்றம் தொடர்பாக எர்ணாகுளம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிபி ஈடன் கடந்த மார்ச் மாதம் மக்களவையில் தனி நபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். மாநிலத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள திருவனந்தபுரம், வட மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு அணுக முடியாமல் உள்ளதாகவும், அனைவரும் அணுகக்கூடிய புதிய தலைநகரின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் மாநில தலைநகர் இடமாற்றக் குழுவை உருவாக்க வேண்டும் எனவும் அதில் அவர் கோரியுள்ளார்.
ஆனால் எம்பியின் இந்த முன்மொழிவுக்கு காங்கிரஸ் மற்றும் பிற கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக பரவூர் தொகுதி எம்.பி. வி.டி.சதீசன் கூறியதாவது: “ஹைபி எனக்கு இளைய சகோதரர் போன்றவர். இதைப் பற்றி கேள்விப்பட்டதும், உடனடியாக அவரை அழைத்து அதிருப்தியை தெரிவித்தேன். இது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அல்ல. இது ஒரு தனிப்பட்ட உறுப்பினர் மசோதா மட்டுமே. அதை வாபஸ் பெறும்படி கூறியுள்ளேன்” என்றார்.
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியதாவது: “அவருக்கு மசோதா தாக்கல் செய்ய முழு உரிமை உள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரமும் மையமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சென்னை தமிழ்நாட்டின் வடக்கு முனையில் உள்ளது, இந்தியாவின் தலைநகரான டெல்லி கூட வடக்கே உள்ளது” என கூறினார்.






