முக்கியச் செய்திகள் இந்தியா

மெல்ல மெல்ல புதையுண்டு வரும் ஜோஷிமத் – காரணம் என்ன?

இமயமலையில் ஆன்மிக சுற்றுலாவுக்கான நுழைவு வாயிலாக திகழும் புனித நகரமான ஜோஷிமத், உயிருடன் பூமிக்குள் புதையுண்டு வருகிறது. நிபுணர் குழுவின் எச்சரிக்கையை காற்றில் பறக்கவிட்டு, ஒரு நகரையே இயற்கையிடம் காவு கொடுக்கும் இந்த நிலைக்கு பொறுப்பேற்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1890 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது தான் ஜோஷிமத் நகரம். இரண்டரை சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இந்நகரில் 3,900 வீடுகள் மற்றும் 400 வணிக வளாக கட்டடங்கள் உள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், இமயமலை அடிவார பகுதிகள் அவ்வப்போது இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துவரும் நிலையில், ஜோஷிமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், 600க்கும் மேற்பட்ட கட்டடங்கள் விரிசலடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அப்புறப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், ‘பூகோள சொர்க்கம்’ என்றழைக்கப்படும் ஜோஷிமத், படிப்படியாக பூமிக்குள் புதையுண்டு வருவதால் நிலச்சரிவு பேரிடர் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அங்கு நேரில் ஆய்வு நடத்திய அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி, தொலைபேசியில் பேசிய நிலையில், அந்நகரில் ஆய்வு செய்ய நிபுணர்கள் குழுவும் அமைக்கப்பட்டது. தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், இந்திய மண்ணியல் ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவினர் நேரில் ஆய்வு நடத்தி பரிந்துரைகளை வெளியிட உள்ள நிலையில் முதல் கட்டமாக அங்கு பாதிப்புக்குள்ளான கட்டடங்களை இடிக்க பரிந்துரைத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டடங்கள் இடிக்கப்பட உள்ள நிலையில், பார்த்து பார்த்து கட்டிய வீடுகள் இடிபடும் நிலையை எண்ணி கண்ணீருடன் பொதுமக்கள் விடை பெற்று செல்கின்றனர்.

ஒரு நகரமே காலி செய்யப்படும் நிகழ்வு பல கேள்விகளை எழுப்பி உள்ளன. அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை, பருவநிலை மாற்றம், மலைப் பகுதியில் தொடர்ச்சியான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதே நிலச்சரிவுக்கு காரணம் என்று உள்ளூர் மக்களால் ஒருபுறம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், மற்றொரு புறம் தேசிய அனல் மின் நிறுவனத்தின் தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் திட்டப்பணிகளே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

பொதுவாக நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் தொடர்பாக மலைப்பகுதிகள் வெட்டப்பட்டு, அகலப்படுத்தப்படும்போது அங்குள்ள நிலப்பகுதிகளை நிலைகுலைய செய்யும் என வல்லுனர்களின் கருத்தாக உள்ள நிலையில், ஜோஷிமத்தின் இன்றைய நிலை குறித்து ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பே நிபுணர் குழு ஒன்று எச்சரித்த விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜோஷிமத்தில் ஏற்படும் நிலச்சரிவு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மிஸ்ரா கமிட்டி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. மலை சரிவின் நடுப்பகுதியில் ஜோஷிமத் நகரம் அமைந்திருப்பதால் இங்கு அடுக்குமாடி வீடுகள் கட்டப்படக் கூடாது என அது எச்சரித்திருந்த நிலையில் அந்த அறிக்கையை அப்போதைய மத்திய, மாநில அரசுகள் கிடப்பில் போட்டதுடன், அதற்கு பிறகு அமைந்த அடுத்தடுத்த அரசுகளும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளதும் தெரியவந்திருக்கிறது.

கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்பதை போல தற்போது நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலையில் ஜோஷிமத்தின் இன்றைய நிலைக்கு பொறுப்பேற்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இயற்கைக்கு எதிரான எந்த ஒரு முயற்சிக்கும் எதிர்விளைவு மோசமானதாகவே இருக்கும் என்ற பாடத்தை ஜோஷிமத் நமக்கு உணர்த்துகிறது.

– எஸ்.முத்துக்குமார், நியூஸ்7 தமிழ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram