இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, 8 பெருநகரங்களில் இல்லங்களுக்கான 5ஜி பிராட்பேண்ட் சேவையை அறிமுகப்படுத்தியது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி ஜியோ ஏர் ஃபைபர் திட்டத்திற்கான அறிமுக பணிகளை பல மாதங்களாக செய்துவந்த நிலையில் செப்டம்பர் 19-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், ஜியோ ஏர்ஃபைபர் 5ஜி பிராண்ட்பேன்ட் சேவை அடுத்த 2 வருடத்தில் 200 மில்லியன் வீடுகளில் இணைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் அறிவித்தபடியே நேற்று இந்தியாவின் 8 பெருநகரங்களில் 5ஜி பிராட்பேண்ட் சேவையை இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, அகமதாபாத், பெங்களூரு ஆகிய 8 பெருநகரங்களில் நிறுவனத்தின் 5ஜி பிராண்ட்பேண்ட் சேவை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. ‘ஜியோ ஏா்ஃபைபா்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை, லட்சக்கணக்கான குடும்பங்கள் உலகத் தரம் வாய்ந்த இணையதள சேவைகளைப் பெற வழிவகை செய்யும்.
கேளிக்கை போன்ற சேவைகள் மட்டுமின்றி, கல்வி, சுகாதாரம், வீட்டுக் கண்காணிப்பு போன்ற அறிதிறன் இல்ல சேவைகளைப் பெற இந்த ஜியோஏா்ஃபைபா் உதவும்” இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







