ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் முகமது சிராஜ் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ், 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்று முடிந்த நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் அபாரமாக பந்துவீசிய சிராஜ், 7 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜின் பந்துவீச்சில் தினறிய இலங்கை அணி 15.2 ஓவர்களிலேயே 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின் எளிமையான இலக்கை எட்ட களமிறங்கிய இந்திய அணி 7 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
அந்த போட்டியில் முகமது சிராஜ் ஆட்ட நாயகானாக தேர்வு செய்யப்பட்டார். எனவே சிராஜின் இந்த சிறப்பான ஆட்டம் அவரை ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட்டை கடந்து முதல் இடத்திற்கு முன்னேற செய்தது.
தரவரிசை பட்டியலில் தற்போது 8 இடங்கள் முன்னேறி முதல் இடத்தில் உள்ள சிராஜ் 694 ரேட்டிங் புள்ளிகளை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் நாள் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 46 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த நிலையில் ஜனவரி 21 ஆம் நாள் வெளியான தரவரிசைப் பட்டியலில் அவர் முதல் இடத்திற்கு முன்னேறி இருந்தார்.
அதுவே சிராஜின் பந்துவீச்சு கரியரில் முதல் முறை அதிகபட்ச உட்சத்தை தொடுவதாகும். எனவே நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிராஜ் அபாரம் காட்டியதை அடுத்து 694 ரேட்டிங் புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார் சிராஜ்.







