பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னர், ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இயக்குநர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளியான ’பொன்னியின் செல்வன்’ படத்தில் கதையின் நாயகனாக, பொன்னியின் செல்வனாக, சிறப்பான நடிப்பை நடிகர் ஜெயம் ரவி வெளிப்படுத்தியிருந்தார். இப்படம் உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
தனக்கு ஏற்ற ஸ்க்ரிப்டுகளை தேர்வு செய்து நடிக்கும் ஜெயம் ரவி, ஒவ்வொரு படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து, அவர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில், இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ’அகிலன்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதன் 80% காட்சிகள், துறைமுகங்களில் படமாக்கப்பட்டுள்ளன. இதனால் NOC அனுமதியில் சிக்கல் ஏற்பட்டது. 2000 கண்டெய்னர்கள் இருக்கும்படியான காட்சிகளும் இருப்பதால், படத்தின் CG & NOCக்காக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது அனைத்து அனுமதிகளை பெற்று இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அகிலன் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. அண்மையில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ’இறைவன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.







